Friday, August 24, 2012

என் கவிதையே... (பகுதி - 6)

கண்மணி…
எத்துனை பேர்களிடம் நான் சண்டையிடுவது??

என் உடைகள் கேட்கின்றன,
எங்களை விடவா அவள் உன்னை அரவணைப்பாள் என்று?
அவைகளுக்கு தெரியாது,
நான் கூறமலே என் நிலை அறிந்து அணைப்பவள் நீ என்று...

என் கண்ணாடி கேட்கின்றது,
என்னை விடவா அவள் உன்னை அழகாக காட்டுவாள் என்று?
அதற்குத் தெரியாது, என் உள் இருக்கும் நீ தான்
அதற்கு முன் தெரிகிறாய் என்று…

என் மோதிரம் கேட்கின்றது,
என்னை விடவா அவள் உன் விரல்களுக்கு மகுடம் சூட்டுவாள் என்று?
பொடியனுக்கு எங்கே தெரியப் போகிறது,
அளவு பார்க்காமலே என் விரல்களில்
மிகச் சரியாய் பொருந்துவது
உன் விரல்கள் தான் என்று…

என் கவிதைகள் கேட்கின்றன,
எங்களை விடவா அவள் அழகு என்று?
அவைகளுக்குத் தெரியாது,
என் வாழ்க்கையின் மிக அழகான கவிதையே நீ தான் என்று...

இந்த உலகம் கேட்கின்றது,
என்னை விடவா அவள் பெரியவள் என்று?
அதற்குத் தெரியாது,
என் உலகமே நீ தான் என்று...

பொறுமை இழந்து
திட்டிவிட்டேன் அவர்களை…
உன்னிடம் நட்பு கொள்ள மட்டும் அல்ல,
பொறாமை கொள்ளவும் எனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று..

உன் அம்மாவிடம் சுற்றி போடச் சொல்…
மனிதர்கள் மட்டும் அல்ல,
இவைகள் கூட உன்னை பார்த்து பொறாமை கொள்கின்றன என்றால்,
இது நிச்சயம் கலி காலம் தான்..!!

No comments:

Post a Comment