Thursday, December 20, 2012

பொழுது விடியுமா.......???

சிகப்பு வண்ண சந்திரமுகி புடவையில் ஆரம்பித்து
பள்ளி நாட்களின் Farewell-காக காத்திருந்தேன்...
நீ வாங்கிய அதே White with Red பாந்தினி சுடிதரை வாங்கியும் வைத்து பார்த்திருந்தேன்....
நீயும் நானும் ஒன்றே போல் உடை அணிந்து,
இந்த உலகை சுற்ற முடியாவிட்டாலும், ஊரையாவது சுற்றலாம் என்று....
வருடமும் எழாயிற்று...
பல வண்ண ஆடைகளின் பரிமாற்றமும் ஆயிற்று...
ஆனாலும் விடியவில்லை நான் நினைத்த பொழுது....
நாள் குறித்து சொல்....கண்மணியே...
காத்திருக்கிறேன்.......எதிர்பார்த்திருக்கிறேன்.....!!!

- After a looonng time, a poem by ~Maaya~

Friday, December 7, 2012

என் கவிதையே... (பகுதி - 11)

"









"
 - ஒன்றுமே எழுதவில்லை என்று பார்க்கிறாயா..
இது தான் கடைசியாக நாம் உன் வீட்டில்
சேர்ந்து இருந்த இரவில்,  என் மடி சாய்ந்து
நீ மௌனமாக இருந்த நொடிகள்..!!!

Thursday, November 22, 2012

என் கவிதையே... (பகுதி - 10)

நீ வேலை செய்யும் வங்கியின் கிளை மட்டும் இன்றி,
மற்ற எல்லா கிளைகளை கடக்கும் போதும்
நீ இருக்க மாட்டாய் என்று தெரிந்தும்
உள்ளே எட்டிப் பார்க்கத் தவறியதில்லை..
நீயோ, என்னை பார்க்க வேண்டும் என்று
உனக்குத் தோன்றவில்லையா என்று கேட்கிறாய்..
இதற்கு  நான் என்ன பதில் சொல்ல??

Thursday, November 1, 2012

சந்தோஷத்தின் விலை

லேசான மழையில்,
சல்லடை  கூரையின் கீழ் நின்று,
முகமும் அகமும் குளிர,
பத்து ரூபாய்க்கு காளான் உண்ணும் சந்தோஷத்தை;
நூற்றுக் கணக்கில் கொடுத்தாலும் தருவதில்லை -
செயற்க்கை குளிரூட்டி, அடைத்து வைக்கப்பட்ட
மேல் தட்டு Restaurant களில் கிடைக்கும்
Pizza - க்களும், French Fries - களும்!!

Wednesday, September 12, 2012

என் கவிதையே... (பகுதி - 8)

அன்று என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு படத்தில்,
யாரோ ஒரு கதாநாயகி, கொலையாவது போல்
நடித்ததை பார்த்து, என் தோளில் சாய்ந்து
குலுங்கி குலுங்கி அழுதாய்..

மிகைப்படுத்தினாலும் பரவாயில்லை,
இன்னும் சிறிது நேரம் கூட
அந்த கதாநாயகியை கொன்று கொண்டிரு
என்று அந்த கொடியவனிடம் வேண்டியது
என் மனது...!!

Tuesday, September 11, 2012

என் கவிதையே.. (உனக்கு ஒரு பெயர்..)

எத்தனை நேரம் தான் உன்னை
கண்ணே, கண்மணியே என்று
காதலர்கள் எல்லோரும் ஏகமாக
அழைப்பது போல் கொஞ்சுவது...

உன் உண்மையான பெயரையே
உபயோகிக்கலாம் என்றால்,
என்னை தவிர நம் காதலை படிக்கும்
யாரும் உன் பெயரை உச்சரிக்க
என் மனம் ஒப்பவில்லை...

அதனால், இன்று உனக்கு
பெயர் சூட்டு விழா நடத்தி,
உனக்கென்று ஒரு அடையாளம்,
நான் மட்டுமே உருகி உருகி அழைக்க
ஒரு பெயர் வைக்கிறேன் -
சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்பது போல்,
என்னுள் இருந்து என்னை வழிநடத்தும்
ஒரு மாய சக்தியாக இருக்கிறாய்.. அதனாலே
உனக்கு 'மாயா' என்று ஒரு பொருத்தமான
பெயரை வைக்கிறேன்...
பிடித்திருக்கிறதா மாயா??

என் பொம்மை

வித விதமாய், அழகழகாய் நிறைய
பொம்மைகள் வைத்திருக்கிறேன்
என்று பெருமை கொள்கிறாய் - நீ..
நான் நட்பாய் வைத்திருக்கும்
உன்னை விடவா என்று
நகைக்கிறேன் - நான்!!

Monday, August 27, 2012

ஒரு அர்த்த ராத்திரி வேளையில்...

ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த
அர்த்த ராத்திரி வேளையில், நான் மட்டும்
பேய் முழி முழித்துக் கொண்டிருக்கிறேன்...

உன்னுடன் இருக்கும் போது இன்னும் சற்று நேரத்தில்
இரயிலை பிடிக்கச் செல்லும் பயணி போல்,
இறக்கை கட்டி பறக்கும் நேரம்
இப்போதோ,
பள்ளி செல்ல மனம் இல்லாமல்
தாயை கட்டிக் கொண்டு அழும்
சிறு மழலையை போல்,
இங்கேயே குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு விட்டது...!

என் கவிதையே... (சிதறல்கள்)

ஒரு நாளில் எத்துனை நிமிடங்களடி கண்ணம்மா??
உன்னுடன் இருந்த நாட்கள், நொடிகளாக பரந்தது போய்,
இன்று நீ இல்லா நொடிகள் கூட நாட்களாய் நீள்வது ஏனோ??
அறிவியல் விந்தையா? அல்லது பிழையா??
ஒரு நாளில் எத்துனை நிமிடங்களடி என் கண்ணம்மா???

-------------------------------------------------------------------

செல்ல பிசாசே...
உன்னை ரசித்துக் கொண்டே இருத்தல் என்ன சுகம்?

அரசு பேருந்து காலியாக வந்தும்
ஓரிரு அடி தள்ளி நின்றதில்
போக சலித்துக் கொண்டு,
ஐந்தாறு ரூபாய் கொடுத்தேனும்
காலடியில் நிற்க்கும் விரைவு பேருந்தில் செல்கிறாய்..

உன்னை ரசிக்கவா?? உன் மழலை சோம்பலை ரசிக்கவா??

என் கவிதையே... (பகுதி - 7)

உன்னை பற்றி எண்ணுகையில் என் மனதிற்கு தான்
என்ன குதூகலமோ..
அந்த நிமிடம் என் மனதிற்குள் யாரேனும் பிரவேசித்தால்,
சுனாமியை விட வீரியம் மிகுந்த என் மன அலைகளுக்குள்
தடம் தெரியாமல் தொலைந்து போவர்..

ஆனால் இந்த பாழாய் போன நெஞ்சுக்கூட்டிற்கு
ஏன் தெரியவில்ல??
அதனுள் என் மனம் இல்லை என்று...

அதை தான் என்றோ உனக்கு ஆயிரம் ஜென்மங்களுக்கு,
கோடி கூடை காதலை வாங்கி,
குத்தகைக்குக் கொடுத்துவிட்டேனே..!!

ஒரு வேளை வெறுமையின் காரணமாய் என்
நெஞ்சுக் கூடு லபோ திபோ என்று
கத்தி கூச்சல் இடும் ஓசை
வெற்றிடத்தில் எதிரொலியாய் மாறி
லப் டப் என்று எனக்குக் கேட்கின்றதோ???

என் கவிதையே... (தொடர்ச்சி)

நீ அழகியல் காந்தம்..
போகுமிடம் எல்லாம் அழகை
ஈர்த்துக் கொள்கிறாயே...
----------------------------------------------------------------

எனக்கு இமைககளே தேவை இல்லை..
கண் மூடினாலும் நீதானே தெரிகிறாய்...!!
----------------------------------------------------------------

கலியுகத்து குந்தி தேவி நான்..
உன்னை கண்ட நொடி முதல்
உன்னை சுமக்க ஆரம்பித்துவிட்டேனே..!!
----------------------------------------------------------------

என் அம்மா எப்போதும் சொல்வதுண்டு,
பிறந்த முதல் ஆறு மாதங்கள் நான்
அழுதுகொண்டே இருந்தேனாம்...
நீ இல்லாத இந்த உலகில்
வேறு என்ன தான் நான் செய்ய??
----------------------------------------------------------------

வாங்கவும் இல்லை
கொடுக்கவும் இல்லை..
பின் எப்படி இடம் மாறியது - நம் இதயங்கள்??
----------------------------------------------------------------

ஒரு நொடிக்கான இறப்பு எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே போகிறதாம்..
நான் தான் நீ ஒவ்வொரு முறை இமை
மூடும்போதும் செத்துப் பிழைக்கிறேனே..!
----------------------------------------------------------------

முதன்முதலில் உன்னை அன்று
பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறாய்
என்று நான் கூற மாட்டேன்..
நீதான் நாளுக்கு நாள்
அழகாகிக் கொண்டே இருக்கிறாயே..!

திருமணம் ஏன்??

திருமணமாம் திருமணம்..
யார் ஆரம்பித்தது இந்த சடங்குகளை..??
இரு மனங்கள் ஒன்றாக சங்கமித்து விட்ட நமக்கு
இனி என் மனித சவங்கள் சேரும் அந்த கூத்து??

Friday, August 24, 2012

என் கவிதையே... (பகுதி - 6)

கண்மணி…
எத்துனை பேர்களிடம் நான் சண்டையிடுவது??

என் உடைகள் கேட்கின்றன,
எங்களை விடவா அவள் உன்னை அரவணைப்பாள் என்று?
அவைகளுக்கு தெரியாது,
நான் கூறமலே என் நிலை அறிந்து அணைப்பவள் நீ என்று...

என் கண்ணாடி கேட்கின்றது,
என்னை விடவா அவள் உன்னை அழகாக காட்டுவாள் என்று?
அதற்குத் தெரியாது, என் உள் இருக்கும் நீ தான்
அதற்கு முன் தெரிகிறாய் என்று…

என் மோதிரம் கேட்கின்றது,
என்னை விடவா அவள் உன் விரல்களுக்கு மகுடம் சூட்டுவாள் என்று?
பொடியனுக்கு எங்கே தெரியப் போகிறது,
அளவு பார்க்காமலே என் விரல்களில்
மிகச் சரியாய் பொருந்துவது
உன் விரல்கள் தான் என்று…

என் கவிதைகள் கேட்கின்றன,
எங்களை விடவா அவள் அழகு என்று?
அவைகளுக்குத் தெரியாது,
என் வாழ்க்கையின் மிக அழகான கவிதையே நீ தான் என்று...

இந்த உலகம் கேட்கின்றது,
என்னை விடவா அவள் பெரியவள் என்று?
அதற்குத் தெரியாது,
என் உலகமே நீ தான் என்று...

பொறுமை இழந்து
திட்டிவிட்டேன் அவர்களை…
உன்னிடம் நட்பு கொள்ள மட்டும் அல்ல,
பொறாமை கொள்ளவும் எனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று..

உன் அம்மாவிடம் சுற்றி போடச் சொல்…
மனிதர்கள் மட்டும் அல்ல,
இவைகள் கூட உன்னை பார்த்து பொறாமை கொள்கின்றன என்றால்,
இது நிச்சயம் கலி காலம் தான்..!!

Thursday, August 23, 2012

கண் தானம்

உலகை ரசிக்க தடையேதும் இல்லை -
மரணத்தையும் சேர்த்து...
கண் தானம் செய்வீர்....!!!

என் கவிதையே... (பகுதி - 5)

பள்ளியில் பகல் முழுவதும் சுற்றித் திரிந்து
கல்லூரியிலும் கரங்கள் ஒன்றாய் கூட
கனவுகள் கண்டோம்…
ஏய் திருட்டுக் கண்ணனே, என்ன உன் திருவிளையாடலா?
இல்லை எங்களை பரிட்சித்து பார்க்க வேண்டி எண்ணமா?
வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்து
அரிதாய் தொடர்பு கொண்டு
அரிதினும் அரிதாய் நேரில் கண்டு
தூரம் அளந்தோம்…

சீதைக்கு மட்டும் தான் சூட்சமம் தெரியுமா?
நாங்களும் அறிவோம்..
சேர்ந்து இருப்பினும் பிரிந்திருப்பினும்
இம்மியளவும் குறையாமல் உறவு வளர்த்தோம்..

என்ன கண்ணா, உன் திருவிளையாடல் தகர்ந்ததா??
குசேலநிடத்து நீ கொண்ட பாசம்,
அர்ஜுனனிடத்தில் நீ கொண்ட உரிமை,
ராதையினிடத்தில் நீ கொண்ட காதல்,
எல்லாம் சேர்ந்ததடா எங்கள் நட்பு!!

அதை நீ அல்ல,
முப்பத்தி முக்கோடி தேவர்கள்..
ஏன் நாங்கள் நினைத்தாலும்
தகர்க்க முடியாது…

காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்செனில்..
நாங்கள் மட்டும் சாமாணியமா???

Tuesday, August 21, 2012

நீ.. நான்.. நட்பு..

என் உயிர் தோழியே..
நமக்கான நட்பு ஆத்மார்த்தமான..
தெய்வீகமான நட்பல்ல..
ஏதார்த்தமான, புரிதலான நட்பு..!

உன் வீட்டில் என்னை உன்னைப் போலவும்,
என் வீட்டில் உன்னை என்னைப் போலவும்
ஏற்றுக்கொண்டு கொண்டாடுவது மகிழ்ச்சி எனில்...

உன்னவர் என்னையும்,
என்னவர் உன்னையும்,
நம்மவர் நம் நட்பையும்
கொண்டாடுவது நெகிழ்ச்சி...

நம் நட்பின் சாட்சி நாம்
கடந்து வந்த இந்த 7 வருடங்களல்ல...
நாம் வாழப் போகும் அடுத்த 50 வருடங்கள்...

என்னைத் தாண்டி, உன்னைத் தாண்டி,
நம் குடும்பம், உறவுகளை தாண்டி
நம் நட்பு தொடரவேண்டும்..
தொடரும்....!!!

Friday, August 17, 2012

என் கவிதையே... (தொடர்ச்சி)

எல்லா எடை இயந்திரங்களும் உன் எடையை
கூட்டிக் காட்டுவதாய் சிணுங்குகிறாய்..
என் இதயமும் உன்னுள் இருப்பதை அறியாமல்...!!
----------------------------------------------------------------

பெண் என்றதில் மிகவும் கர்வம்
கொண்டிருந்த நான், இன்று
முதன் முதலாய் வருத்தப்படுகிறேன்..
ஆணாய் பிறந்திருந்தால் உன்னை
என்றோ என்னவள் ஆக்கிக் கொண்டிருப்பேன் - அதனால்..!!
----------------------------------------------------------------

அலை அலையாய் அலைந்து என்
மனதை அலைப்பாய வைக்கும் உன்
கருங்கூந்தலை ஏனடி அள்ளி முடிகிறாய்?
நான் சந்தோஷமாய் இருப்பதை காண்பதில்
உனக்கு அப்படி என்ன கஷ்டம்?
----------------------------------------------------------------

என்னை நம்புங்கள்..
நான் கவிஞன் அல்ல..
நான் கவிதை எங்கே எழுதினேன்??
அவளை அல்லவா எழுதிக் கொண்டிருக்கிறேன்???!!!
----------------------------------------------------------------

எல்லா கவிஞர்களுக்கும் மிகவும் பிடித்த
தலைப்பு "நிலா" என்ற போது,
எனக்கு மட்டும் எப்படி
அது "நீ" ஆனாய்??
----------------------------------------------------------------

அழுத்தக்காரி..
என்று என் மனதிற்க்குள் புகுந்தாய்
என்பதை தயவு செய்து சொல்லிவிடு,
நான் என் பெண்மையை தொலைத்தது அன்றுதான்...!
----------------------------------------------------------------

பள்ளியில் இருந்து வீடு திரும்பும்
ஒவ்வொருவரும் பையில் புத்தகங்களை
சுமந்து செல்ல, நான் மட்டும்
உன் வாசனையை சுமந்து செல்கிறேன்...!
---------------------------------------------------------------- 

நீ பேசுவது கொள்ளை அழகென்றால்,
உன் மௌனத்தை என்னவென்று சொல்வது??
---------------------------------------------------------------- 

இரு வரி கவிதை எழுதத் தெரியாதா
என்று என்னை கேட்கின்றனர்..
இரு வரி அல்ல, ஒற்றை வார்த்தையில்
எழுதத் தெரிந்தும் எழுதாமல் இருக்கிறேன் -
உன் பெயரை யாரும் திருடாமல் இருக்க
வேண்டும் என்று...!

---------------------------------------------------------------- 

நீ காதலன் நான் காதலியா??
நான் காதலன் நீ காதலியா???
காதலன் காதலி தொலைந்து
காதலை காதலாகி கொண்டாடுவோம் வா....
----------------------------------------------------------------

கர்வத்தை கர்வம் கொள்ள வைத்த அழகு,
உன் அழகு...!
----------------------------------------------------------------

வசியக்காரி...
என்னை வசியப்படுத்தி என் நினைவுகளை
முழுங்குகிறாய்...
தொலைபேசியை துண்டித்தபிறகு தானே
உன்னிடம் என்ன பேசவேண்டும் என்பது ஞாபகம் வருகிறது....!

என் ரியோ குட்டி....

என் காதலன் கண் முன்னே என் மடியில் வந்து படுக்கிறாய்...
நான் கொஞ்ச வேண்டும் என்றே பற்பல சேஷ்டைகளை செய்கிறாய்...
இரவு நான் வீடு திரும்பும் வரை எனக்காக காத்திருக்கிறாய்...
என் அனுமதி இல்லாமல் உணவை கூட உண்ண மறுக்கிறாய்...
இத்தனை காதல் இருந்தும் ஏனடா என்னை விட்டுப் பிரிந்தாய்?

வீடெங்கும் உன் குரல் கேட்குதடா...
என் உடை எல்லாம் உன் வாசம் வீசுதடா...
நீ இன்றி இனி நம் வீட்டில் நான் எப்படி இருப்பேன்??

இனிமேல் இப்படி ஒரு உறவே வேண்டாம் என்று
நான் எண்னுமளவு என்னுள்
உனக்கான இடத்தை புதைத்த உன்னை,
என் கைகளாலேயே புதைக்க வைத்தாயே
என் ரியோ குட்டி...
என்றும் என்றென்றும் உன் குறும்பின்,
உன் சுட்டித்தனத்தின், உன் அழகின்
அடிமையாக்கி போனாயே,
என் செல்ல குட்டி....!!

Tuesday, August 14, 2012

மீள முடியவில்லை

மீள முடியாமல் தவிக்கிறேன்..
இதயத்தில் இருந்து பாய்ந்து செல்லும்
குருதி, தன்னுடன் என் ரனங்களையும்
சேர்த்துக் கொண்டு பாய்கிறது..
என் உறுதியை மெல்ல மெல்ல
நிலை குலையச் செய்கிறது..
ஆம்.. நான் மெல்ல மெல்ல
இதயம் சொருகி..
வீழ்ந்து கொண்டிருக்கிறேன்..
உணர்வுகள் எல்லாம் செயல் இழந்து
வெறும் சதைக் குவியலாக நான் மாறும் முன்,
ஒரு முறை, ஒரே ஒரு முறை..
நான் கண்ட கனவு.. நினைத்த பொழுது..
அது ஒரு க்ஷணமே ஆனாலும்,
அனுபவித்து, நிற்க...
வாழ்ந்து.. பின் எந்தன்
அன்னை மடியில் வீழ வேண்டும்...!

என் அன்புச் செல்வம்

உன் கண்களிடம் தோற்றது, மின்னலின் கீற்று..
உன் இமைகளிடம் தோற்றது, பறவையின் இறகு..
உன் கன்னங்களிடம் தோற்றது, நிலவின் குழைவு..
உன் உதடுகளிடம் தோற்றது, தேனின் சுவை..
உன் விரல்களிடம் தோற்றது, மயிலின் தோகை..
உன் பாதங்களிடம் தோற்றது, தாமரையின் வண்ணம்..
உன் ஸ்பரிசங்களிடம் தோற்றது, பட்டின் கர்வம்..
என் குழந்தை பருவத்தை மீட்டு தந்த பிள்ளை தங்கம் நீ..
என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்த அன்புச் செல்வம் நீ..
உன் மொட்டுக் கன்னத்தில்,
உன்னை பெறாத தாயின் பட்டு முத்தங்கள்...!!

என் கவிதையே... (பகுதி - 4)

உன்னையும் என்னையும் விட நம் நட்பை அதிகம் சுமந்தது
நம் பேனா தான்…
இன்னும் ஈரம் காயாமல் விரல்களில் ஒட்டிக் கொள்கின்றது
நாட்குரிப்பில் நாம் பரிமாறிய கவிதைகள்…

ஓரிரு வாய் உணவு மீதம் இருக்கையில்
நீ ஊட்ட வேண்டும் என்றே நான் உண்ண மறுக்க,
பகலிலும் உண்டு நிலா என்று,
உன் ஆம்பல் விழிகளில் தொலைந்து
நான் உன் முகம் பார்க்க,
பருக்கை சிந்தாது நீ ஊட்டி விட்ட பொழுதுகள்…

நமக்கு மொழிப் பாடம் எடுத்த நம் மல்லிகா Mam
அவ்வப்போது அவர் அணியும் புடவை, அணியும் விதம்
பற்றி வியந்து பேசுவது ஒரு புறம் இருக்க;
நாம் ஒரு நொடி கவனம் சிதறாது பாடத்தை மட்டுமே
கவனித்த ஒரே வகுப்பு - அவர் வகுப்பு…

லீனா என்றொரு பட்டாசு,
உன்னை அழைத்துக் சொன்னது..
என்னுடன் சேர வேண்டாம், நான் உன்னையும் கெடுத்து விடுவேனாம்…
இப்படி சொன்னதற்கு என்னை விட அதிகம் வருத்தப் பட்டது நீ..
அவருக்கு எங்கே தெரிய போகிறது???
பள்ளி நட்பை தாண்டி நாம் வெகு தூரம் சென்று விட்டது…

பரிட்சைக்கு முந்தய விடுமுறையில் கூட
உன் நினைவுகள் என்னையும்,
என் நினைவுகள் உன்னையும் கிழிக்க,
பள்ளியின் முதல் மாடியில்,
காற்றும் சிலந்தியும் மட்டுமே சொந்தம் கொண்டாடும்
வகுப்பறையில், மேஜை நாற்காலியின் வாசத்தில்,
நீயும் நானும் தனிமையில்
படித்து, உறங்கி, உண்டு, பேசி, பகிர்ந்து, மகிழ்ந்து,
அமுத சுரபியை போல்
அள்ள அள்ள குறையாத,
சொல்ல சொல்ல தெரியாத / தீராத
இன்பங்களில் திளைத்து, வளர்ந்தோம்..
நாம் நட்பை வளர்த்தோம்..

தமிழே, உனக்கு செம்மொழி அந்தஸ்தை கொடுத்தது யார்??
இன்னும் இன்னும் எங்கள் உணர்வுகளை மொத்தம்
வெளிக் கொணரும் ஒரு வார்த்தை உன் மொழியில் இல்லையே..
தமிழ் மொழியில் இல்லை…
தமிழே, உனக்கு செம்மொழி அந்தஸ்தை கொடுத்தது யார்????

Friday, August 10, 2012

செய்த பின் செத்து மடி!

முன் ஜென்மம் பின் ஜென்மம்,
இவைகளில் நம்பிக்கை கொண்டவள் அல்ல நான்..
இந்த ஒரு ஜென்மம் கொடுத்ததற்காக,
இறைவனுக்கு முழுமையாக நன்றி கூறுபவள்..

என் மேல் எனக்கு இருக்கும் காதல் என்பது,
என் அன்னைக்கு என் மேல் இருக்கும் அன்பிற்கு இணையானது..
ஆம்.. நான் என்னை காதலிக்கிறேன்..
என்னை மட்டும் அல்ல,
என் விருப்பங்கள், என் வெறுப்புகள்,
என் செயல்கள், என் சறுக்கல்கள்,
என் உரிமைகள், என் சிறுமைகள்,
என் மொத்தத்தையும் காதலிக்கிறேன்..
அழகாக.. அமைதியாக... ஆழமாக...

என்னை நானே எண்ணி பார்க்கிறேன்..
போவதற்க்கு வெகு தூரம் இருக்கின்றது..
பார்ப்பதற்கு பலதும் இருக்கின்றது..
செய்வதற்க்கு கொட்டிக் கிடக்கின்றது..
செய்.. என் காதலே..
செய், அல்லது செத்து மடி - காந்தி அடிகள் சொன்னது..
நான் காந்தியவாதி அல்லவே..
சாவிற்குமுன் ஒரு முறையாவது செய்..
இது எனக்கு நானே சொல்வது..!

என்னை அறியாதவர்க்கு நான் திமிர் பிடித்தவள்..
என்னை அறிந்தவர்க்கு நான் பிடிவாதக்காரி..
திமிர.. பிடிவாதமோ.. இல்லை வேறொன்றோ..
செய்வேன்.. செய்த பின் செத்து மடிவேன்...
நிம்மதியாக.. நிறைவாக…!!!