Tuesday, March 20, 2012

உன்னவள்

உன் கண்களுக்குள் ஊடுருவி
என் காதலை சொன்ன அந்த தெய்வநொடி,
நான் உன்னவளானேன்..!!

Tuesday, March 13, 2012

கொஞ்சல் பெண்ணே...

கிளிப்பெண்ணே... உன் கொஞ்சல் பேச்சால் என்னை கவர்ந்த பெண்ணே...
கண்டேன் உன்னிடம் ஏதோ ஒன்றை...
நாளைய கவலைகளோ, நேற்றைய வேதனைகளோ இன்றி,
அந்த ஒரு நொடி சந்தோஷத்தில் கழியும் நம் நிமிடங்கள்..!
காலத்தின் மற்றுமோர் சுழற்சியில் நாம் பிரிந்தாலும்,
என்றோ ஓர் நாள் நாம் சந்திக்கும்போது
இதே நெருக்கத்தில், இதே நட்பில் இன்னுமோர் நாள் கழிக்க வேண்டும்,
என் கிளிப்பெண்ணே..!

ஆயிரம் காலத்து பயிர்

அம்மி மிதித்து.. அருந்ததி பார்த்து..
சொந்தம் பந்தம் படை சூழ,
மனித மனங்கள் ஆட்சதை தூவ,
நடக்க இருக்கும் நம் திருமணம்-
வெறும் திருமணம் அல்ல, பல நல்ல உள்ளங்கள்
நம்மை மனதார வாழ்த்தும் இனிய தருணம்..!
காதலர்களாக கசிந்து உருகி இருப்பினும்,
அன்று ஏற்படும் இலேசான உரசல்களும் ..
திருட்டுப் பார்வைகளும்.. அடடா...!!
அன்று ஓர் நாள் முழுவதும்
நெஞ்சமும் உடலும் பதைபதைக்க..
கழுத்தில் முடிச்சு விழும் அந்த ஓரிரு தருணங்கள்..
அதற்க்கு பின் நான் உன்னவள்,
முழுமையாக ஓர் அங்குலம் கூட மிச்சம் வைக்காமல்
உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு,
இனி எல்லாம் நீதான் என்று குதூகலிக்கும்
அந்த க்ஷணங்கள்.. அப்பப்பா...
இன்னும் எத்தனை எத்தனை இன்பங்களடி..??
இதுதான் ஆயிரம் காலத்து பயிரடி!

பாரதி கண்ணம்மா

பாரதி பல செல்லம்மாக்களை கண்ணம்மாவாக மாற்றினார்..
இன்றைய பாரதியின்
புதுமைப் பித்தன்களோ,
கண்ணம்மாக்களை
செல்லம்மாவாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்..!

எனக்கு நீ, உனக்கு நான்..

பல லட்சம் அணுக்களை
வெற்றி கொண்டு
நீயும் நானும் மட்டும் மண்ணில் பிறந்த ரகசியம் என்னவோ?
கருவாக உருவாகும் முன்னரே
எனக்கு நீ, உனக்கு நான்
என்று எழுதி வைத்தானோ இறைவன்?

நான்... மீரா...

என் தேடல்,
ராமருக்காக காத்திருக்கும் சீதையுடைய   தேடல் அல்ல
என்றேனும் வருவார் என்ற நம்பிக்கையில் தவம் இருக்க..!
இவ்வுலகில் யாரும் ராமர்  அல்ல..
ராமராக  இருக்கவும் முடியாது... இருக்கவும்  முயற்சிக்க வேண்டாம்..
வந்தாலும், வராவிடிலும், கண்ணனை நினைத்து நினைத்து,
மனம் உருகி, திசை கலங்கி, உயிர் பெருகி,
ஓர் மாய நிலையில் இருக்கும் மீரா  நான்..!!
என்றேனும் ஒரு நாள், என்னை தேடி ஏதேனும் ஒரு கிருஷ்ணன்  வரக்கூடும்..
அந்த கிருஷ்ணனுக்காக, அந்த கோபாலனுக்காக,
இந்த மீரா  எப்போதும் காத்திருப்பேன்!!

காதல் படுத்தும் பாடு!

காதல்..
இது படுத்தும் பாடு, சொல்லி மாளாது..

எங்கும் உன் முகம்..
எதிலும் உன் குரல்..
எப்போதும் உன் நினைவுகள்..

தேடிக்கொண்டே இருக்கின்றன என் கண்கள்,
உன் முகத்தை..
கேட்டுக்கொண்டே இருக்கின்றன என் செவிகள்,
உன் குரலை..
ஏங்கிக்கொண்டே இருக்கின்றன என் உணர்வுகள்,
உன் ஸ்பரிசங்களை..

அமைதியான இடத்தில் மட்டுமே
கவிதை எழுதிய என்னை..
இத்துணை பேர் மத்தியில்,
இத்துணை வேலைகளுக்கு நடுவில்,
கவிதை எழுத வைத்த உனக்கு,
அழகாய்.. அழுத்தமாய்.. என் அன்பு முத்தங்கள்..!!!

Monday, March 5, 2012

காதலில் விழுந்தேன்...

நாட்குறிப்பில் கூட மனதில் பட்டதை எழுத முடிவதில்லை,
காதலில் விழுந்த பின் !!