Monday, July 17, 2017

என் கவிதையே... (பகுதி - 19)

உன்னில் இருந்து உருவான ஒரு உயிர் வீட்டிலும்
என்னில் இருந்து உருவான ஒரு உயிர் கருவிலும் இருக்க
நீயும் நானும் நாமாகவே இருப்பதை
தன் ஒரு சொல்லில் அடக்க முயன்று
தோற்றுத் தான் போகிறது நட்பு..

-------------------------------------------------------------------
நம் நட்பிற்கு சாட்சியாய் இருப்பது
ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பு மட்டும் அல்ல..
உன் சுகத்தில் என் கண்கள்
என்னை அறியாமல் சிந்தும் ஒரு துளி நீரும்..
என் சோகத்தில் உன் நெஞ்சம்
உன்னை அறியாமல் சிந்தும் ஒரு துளி குருதியும் தான்..


-------------------------------------------------------------------
பத்து மாதம் உன் பிள்ளையை சுமந்தது 

உனக்கு ஆனந்தம் என்றால்
உன்னை பாத்து ஆண்டுகளுக்கும் மேலாக 

நான் சுமந்து கொண்டிருக்கிறேனே
அதற்க்கு என்ன சொல்கிறாய்..??


-------------------------------------------------------------------
எல்லாருக்கும் மாதம் ஒரு முறை தான்
பௌர்ணமி வருகிறது..
எனக்கோ வருடம் ஒன்றிரண்டு முறை
உனை காணும் நாட்களே பௌர்ணமி..


-------------------------------------------------------------------
தூக்கத்தில் நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேனாம்..
கனவில் நீ வரும் போது நான் வேறு என்ன செய்ய..??


-------------------------------------------------------------------
உன் வீட்டில் திருஷ்டி
க்காக பிள்ளையார் வை..
முருகனை வைத்தால், வள்ளி தெய்வானையோடு
உன்னையும் அழைத்து
ப் போய் விடுவார்..

-------------------------------------------------------------------
நாட்கள் கடந்து போகும் போது அதிகரிப்பது
என் வயது மட்டும் அல்ல ,
உனக்கான என் காதலும் தான்..


-------------------------------------------------------------------
உன்னை பார்த்து விட்டு வீடு திரும்பும் நாட்களில் எல்லாம்
நான் பொம்மையை தொலைத்த குழந்தையாகவே இருக்கிறேன்..

என் கவிதையே... (ஒரு இடைவெளிக்கு பிறகு)

மூன்று ஆண்டுகள்..
மூன்று ஆண்டுகள் ஆகிறது,
நான் நம் வலைப் பதிவிற்கு வந்து..

வேலை சுமை அதிகம்..
வீடு.. பணி.. என்று சமாளிக்க முடியவில்லை..
நேரமே கிடைக்கவில்லை.. 
இதெல்லாம் தான் காரணம் என்று நான் கூற மாட்டேன்..
அது உண்மை இல்லை என்று
எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்..

இந்த இடைப்பட்ட நாட்களில் நீ பல முறை கூறியும் 
நான் நானாக இல்லாத காரணத்தைத் தவிர  
வேறு எதுவும் கூற முடியவில்லை எனக்கு..

இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் எழுதுகிறேன்..
நான்எழுதியது எப்படி இருக்கோ தெரியவில்லை..
உன்னை பற்றிய மிதப்பில் இருக்கும் எனக்கு 
எழுதும் முன் வைக்கும் 
பிள்ளை சுழி கூட அழகாகத் தான்  தெரிகிறது...!

என்னவளே , இனிய இருவர் தின வாழ்த்துக்கள்..!!

Friday, July 18, 2014

என் கவிதையே... (பகுதி - 18)

இன்று நம் நாள் என்று
ஆனந்தத்தில் திளைத்து
முகமெல்லாம் முப்பத்தி இரண்டாய்
இருந்த என்னை,

பார்வை மங்குமளவு கண்களில்
கண்ணீர் திரளச் செய்தாயடி -  என் தோழி..


எத்தனையோ கஷ்டங்களிலும் கலங்காத என்னை,
உன் கவிதையால் கட்டி போட்டாயடி..

உன்னில் நீ தொலைந்து பார்த்த நாள்
நினைவில் இருந்து விலக,
உன்னை மறுபடியும் நீயாக
காண்கிறேன் என் அகம் மலர..


என் அலமாரியில் பார்க்கிறேன்..
நாம் பரிமாறிய பரிசுகள் யாவும்,
ஒன்பது வருடங்கள் நாம் பகிர்ந்த

அன்பிற்கு முன் நிற்க முடியாமல்
நானி கோணி நிற்கின்றன..


பத்தாவது வருடத்திலும் இம்மியும் மாறாமல்
இருக்கின்றது நம் காதல்..

இது தான் நாம் நமக்கு தரும்
நம் இருவர் தின பரிசு..!!

என்னவளின் இருவர் தின வாழ்த்துக்கள்!

அதிகாலை கடிகாரம் உற்சாகம் தந்தது..
கைப்பேசியும் நாட்காட்டியும் வாழ்த்துக்கள் சொன்னது..
சோம்பல் முறித்து தேநீர் அருந்த கண்கள் மூடியது..

இதழ்கள் மலர்ந்து இதயம் நெகிழ்ந்தது,
நம் நாளை நினைத்து..

குளித்து முடித்து ஆடை தேட கைகள் நீண்டது..
நீ தந்த உடை இன்று நான் தான் வருவேன்

என்று என் முன் வந்தது..
அழகாக அணிந்து கண்ணாடியைப் பார்க்கிறேன் -

உன் முகம் தெரிந்தது..!
ஆசையாய் ஆர்வமாய் தொட்டு பார்க்க,

என் மனம் ஏங்கியது..!!
எப்போதும் போல் என் பிம்பம் கண்டு

ஏமாற்றம் அடைந்தது...
கண்களுக்கு தெரிவது கைகளுக்கு எட்டவில்லையே

என்று என் மனம் கலங்கியது..

உடனே துடி துடித்து பதற்றம் கொண்டாய்..
இதோ வந்து விட்டேன் என்று என்னுள் வந்தாய்..
என் ஆடையாய் மாறி என்னை கட்டி அனைத்தாய்..
சுற்றி இருக்கும் காற்றில் கலந்து என்னுள் நிறைந்தாய்..
காதோரம் கீசுக்கிசுது கவிதைகள் படித்தாய்..


மீண்டும் பிறந்தது நமது காதல்.....!!!

ஒன்பது வருட அன்பை ஆஸ்திவாரமாகக் கொண்டு,
பத்தாவது வருடத்திற்குள் அடி எடுத்து வைக்க
கைகள் விரித்து அழகாக அழைக்கிறது..

அள்ளி அனைத்து வரவேற்க நாம்
இரு கரம் சேரட்டும்
நமது இந்த இனிய நாளில்.......!!!



என்னவளே......மீண்டும் நம் இருவர் தின வாழ்த்துக்கள்......!!!!!



~Maaya~

Thursday, July 17, 2014

என் கவிதையே... (பகுதி - 17) - இருவர் தின வாழ்த்து!!

நாளுக்கு நாள் என் எடை
கூடைக் கொண்டே போவதாய்
சலித்துக் கொள்கிறான் என்னவன்..


நாளுக்கு நாள் கூடுவது எடை அல்ல,
உன் மேல் நான் கொண்டுள்ள காதல் தான்
இத்தனை அசுரத்தனமாய்
நிமிடத்திற்க்கு  நிமிடம் கூடுகிறது என்று
எனக்குத்தானே தெரியும்!!


என்னவளே, மீண்டும் இனிய இருவர் தின வாழ்த்துக்கள்..!!!

Wednesday, March 19, 2014

என் கவிதையே... (பகுதி - 16)

தொலைந்து போனதை பற்றி நான்
சந்தோஷப்படும் ஒரே பொருள் - என் இதயம்!
-----------------------------------------------
நீ வெளியே போகும் போது மழை வந்தால்
தயவு செய்து குடை பிடித்துக் கொள்..
உனக்கு இந்த பொல்லாத மழையைப் பற்றித்
தெரியாது - அது வருவதே, உன் அழகில்
கொஞ்சமேனும் திருடிப் போகத்தான்!
-----------------------------------------------
உன் சமையலை உண்ட பின் கண்களில்
கண்ணீரோடு உன்னைப் பார்த்தேன்..
உணர்ச்சிவசப் படுகிறாயா என்று கேட்டாய்;
மிளகாய் வசப்பட்டு விட்டேன் என்றேன்..
செல்லமாய் என்னை அடித்து விட்டுப் போனாய்,
நான் மீண்டும் அங்கு காதலில் விழுந்தேன்..
-----------------------------------------------
நீ வெட்கப்பட்டு என்னிடம்
உன் காதலை சொன்ன அந்த நேரம்,
காதல், உன் பின்னால் நாணி நின்றது!
-----------------------------------------------
உன்னை பற்றி நினைத்த உடனே எப்படி
என்னை அழைத்தாய் என்று நீ கேட்கிறாய்..
நீ என்னைப் பற்றி நினைப்பதை,
என்னிடம் இருக்கும் உன் இதயம் தான்
சொன்னது என்று உனக்குத் தெரியாது..!

Tuesday, November 26, 2013

என் கவிதையே... (பகுதி - 15)

உன் கையில் மருதாணி இட்டு
நன்றாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்காதே..
நீ காட்டும் மாருதணியை விட
நடு நடுவே இருக்கும் உன் கை தான்
எனக்கு அழகாகத் தெரிகிறது!!